நல்ல உடல் நலத்திற்கு பாரம்பரிய உணவா? துரித உணவா?

நல்ல உடல் நலத்திற்கு பாரம்பரிய உணவுகளா, துரித உணவுகளா என்பது பற்றி கோவை என்.ஜி. மருத்துவமனை சேர்மன் மற்றும் லேப்ராஸ்கோபி, எண்டாஸ்கோபி சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் விளக்கமளிக்கிறார்.

உணவே மருந்து என்பது நமது சித்தர்களின் கோட்பாடு. நம் நாட்டு உணவு முறையானது நமக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தருவதாகும். நமது முன்னோர்கள் பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றி வந்தனர். குறிப்பாக கேழ்வரகு, கம்பு, சோளம், திணை போன்ற தானியங்கள் மற்றும் பலவகை பயிறு வகைகளும் அன்றாட உணவில் பெரும் பங்கு வகித்தன. சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள் மற்றும் நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகளையே உண்டனர். விழாக்காலங்களில் மட்டுமே அரிசியை சமைத்து உணவாக உண்டனர்.sriveg

அவர்களது உடல் நலம் மிகவும் ஆரோக்கியமாகவும் நல்ல திடகாத்திரமாகவும் இருந்தது. தங்களது உடல் உழைப்பினால் உணவு உற்பத்தியினைப் பெருக்கி உலகிற்கு சத்தான உணவளித்து வந்தனர். மக்கிப்போன இலைதழைகள், மாட்டுச்சாணம் போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்த தானியங்கள் நச்சுத்தன்மை இல்லாமலும், வைட்டமின், புரதம் மற்றும் தேவையான சத்துக்கள் நிறைந்தும் காணப்பட்டன. அதனால் அவர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் நோய் நொடி இல்லாத நீண்ட ஆயுளைக் கொண்டிருந்தனர்.

உணவில் பயன்படுத்தும் கடுகு, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, மிளகு, தானியவகைகள் போன்றவை மருத்துவகுணம் மிகுந்தவை. அப்போது உணவே மருந்தாக இருந்தது. காலப்போக்கில் அதிக மற்றும் விரைவான உணவு உற்பத்திக்காக ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி வருவதால் தானியங்கள், காய்கறிகள், பழவகைகள், கீரைகள் போன்ற அனைத்தும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி வருகின்றன. அவற்றை உட்கொள்ளும் நாம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம். மலட்டு விதைகளை பயன்படுத்துவதால் விளை நிலத்தின் தன்மையும் பாதிக்கப்படுகிறது.

அதனால் உணவு உற்பத்தி குறைந்து பிறகு அந்நிலங்கள் உற்பத்திக்கான பயன்பாட்டிற்கு தகுதி இல்லாத நிலங்களாக ஆகிவிடுகின்றன. இதனால் நம் வாழ்வாதாரங்களான விளை நிலங்கள் உணவு உற்பத்திக்கு பயனற்றுப் போகின்றன. அண்மைக்காலம் தொட்டு பாரம்பரிய உணவுமுறைகள் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து மேற்கத்திய உணவு முறைகள் நம் மக்களிடம் ஆதிக்கம் செலுத்தத் துவங்கியுள்ளன. நுகர்வு கலாசாரத்தினாலும் கவர்ச்சியான விளம்பரங்களினாலும் பீசா, பர்கர் போன்ற ஜங்க் புட்ஸ் என்றழைக்கப்படும் குப்பை உணவுகள் சிறியோர் மற்றும் இளைஞர்களை பெரிதும் கவர்ந்து அத்தகைய உணவுகளை உண்ணுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உணவு சமைப்பதில் சோம்பல், ஆர்வமின்மை, பொறுமையிழத்தல் போன்ற உப்பு சப்பில்லாத காரணங்களினால் ரெடி மிக்ஸ் போன்ற உணவு வகைகளுக்கு அடிமையாகி அதிக விலை கொடுத்து நோயை மலிவாக வாங்கி வருகின்றனர். இந்த வகை துரித உணவுகளை ருசிக்காக சாப்பிட்டுவிட்டு பிறகு பசி வராமல் அவதிப்படுகின்றனர். அதிக கொழுப்பு, எண்ணெய், காரம், உப்பு நிறைந்துள்ள இத்தகைய உணவினால் குடலுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பலவகை நோய்கள், குறிப்பாக அஜீரணம், வயிற்றுவலி, புளித்த ஏப்பம், வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுபோக்கு போன்றவை ஏற்பட்டு குடலுக்கு பெருத்த ஆபத்தை விளைவிக்கிறது.

மேலும் இவ்வகை உணவுகள் நமது உடலின் எடையை மிக விரைவாக அதிகரிப்பதுடன் தன்னோடு பல கொடூரமான நோய்களையும் கொண்டு வருகின்றது. நீரிழிவு நோய், இருதய கோளாறு, உயர் ரத்த அழுத்தம் என இவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்.

தகவல்-தினகரன்

Shortlink:

Posted by on November 16, 2013. Filed under சமையல். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *