பரதேசி

சினிமா அல்ல பாலா என்ற பிரம்மனின் சிருஷ்டி.

1969ம் ஆண்டு ஆங்கிலத்தில் பி.எச்.டேனியல் எழுதி ‘ரெட் டீ’ என்ற பெயரில் வெளிவந்து, தமிழில் ‘எரியும் பனிக்காடு’ என்ற பெயரில் இரா.முருகவேலால் மொழி பெயர்க்கப்பட்ட இக்கதை இத்தனை நேர்த்தியாக நெய்யப்பட்டு வெளிவரும் என்று நூலாசிரியர்களோ இன்றைய சினிமா ஜாம்பவான்களோ நினைத்திருக்க மாட்டார்கள்.

1939-களில் தென்தமிழ்நாட்டில் நெல்லை சீமையோரமாக இருக்கும் சாலூர் கிராமத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைக் கதை..! நிஜமாகவே ரத்தமும், சதையுமாகவே சொல்லப்பட்டிருக்கிறது..! முதல் பகுதியில் எத்தனை சந்தோஷமாக வாழ்ந்த அந்த மக்கள், இரண்டாம் பகுதியில் ஆங்கிலேயரின் அடிமைத்தனத்தில் சிக்கி எப்படி தங்களது வாழ்க்கையை தொலைத்தார்கள் என்பதை உருக்கத்துடன் உயிராக்கியிருக்கிறார் பாலா..! மனித மனங்களின் ஆசை, விருப்பு, வெறுப்பு, கோபம், பொறாமை, குரோதம், காமம் என்று அனைத்தையும் கலந்து கட்டியடிப்பதில் பாலா அற்புதங்கள் நிகழ்தியிருக்கிறார். parathesi

முதல் பாதியில் படம் இறக்கை கட்டடிப் பறக்கிறது..! இறந்து கொண்டிருப்பவரின் கை உயரத் தொடங்கியபோதுதான் ‘ஓ இடைவேளையா’ என்ற எண்ணமே வந்தது.. இரண்டாம் பாதியின் சோகத்திற்கும் கிஷோரின் எடிட்டிங் பணி மிக முக்கியமானது..! எந்த இடத்திலும் ஜெர்க் ஆகாமலும், திசை திரும்பாமலும் படத்தினை இறுதிவரையில் அதன் டெம்போ குறையாமல் கொண்டு சென்றிருக்கிறார் கிஷோர்..! பாராட்டுக்கள்..! தேயிலைத் தோட்டத்தின் பிரமாண்டம்.. அட்டைகள் காலில் ஒட்டிக் கொண்டு உறிஞ்சியெடுக்கும் பயங்கரம்.. சின்னப் பிள்ளைகள்கூட இந்த அடிமைத்தனத்தில் மாட்டிக் கொண்டு சித்ரவதைப்படுவது என்று நம் மனதை ஆய்ந்து வைக்கும் காட்சிகள் நிறையவே இருக்கின்றன..

அதர்வா முதல் அத்தனை பேருமே அருமையா தங்களது பங்களிப்புகளை வளங்கியிருக்கிறார்கள். கங்காணியாக இயக்குநர் ஜெர்ரி நடித்திருக்கிறார்..! கொள்ளை நோய்க்கு மருத்துவம் செய்ய வரும் டாக்டர் பரிசுத்தமாக நடன இயக்குநர் சிவசங்கர்..! வெள்ளையாக இருந்தவரை கருப்பாக்கி நடிப்பை மட்டும் கச்சிதமாக வாங்கியிருக்கிறார் பாலா..! அத்தோடு அவர் ஆடும் அந்த நடனமும், பாடல் காட்சிகளும் அருமை..!

மதுரை வீரனையும், குல தெய்வத்தையும் வணங்கிக் கொண்டிருந்த தமிழர்களை எப்படி மதமாற்றம் செய்து கிறித்தவர்களாக ஆக்கினார்கள் என்பதை பாலா எடுத்துக் காட்டியிருக்கும் இந்த விஷயம் அடுத்து தமிழகத்தின் சர்ச்சையான விஷயமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்..! சிவசங்கரும், அவருடைய மனைவியும் சேர்ந்து நோயாளிகளுக்கு முதலில் சிலுவை போட சொல்லிக் கொடுத்து பின்பே சிகிச்சையளிப்பது, மதம் எந்த அளவுக்கு அப்போதே நம்மிடம் திணிக்கப்பட்டது என்பதை இந்த ஒரு படத்தின் மூலம் மட்டுமே பதிவாகியுள்ளது..!

ஜி.வி.பிரகாஷ்குமார் என்னும் இசையமைப்பாளர் இந்த படத்தில்தான் அசத்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.. டைட்டில் காட்சிகளில் தொடங்கி படத்தின் இறுதிவரையிலும் தேவையான இடங்களில் ஆர்ப்பரித்தும், அடங்கியும், அட்டகாசம் செய்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார். உண்மையாகவே ரீரெக்கார்டிங்கில் பின்னியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..!

மொத்தப் படத்தையும் எடுத்து முடித்துவிட்டு காட்சிகளை போட்டுக் காண்பித்துவிட்டு அதன் பின்புதான் பாடல்களை எழுதி இசையமைத்தார்களாம்.. என்னவொரு மேஜிக்..? காட்சிகளுக்கேற்ற பாடல்களை உணர்ச்சிகரமான வார்த்தைகளுடன் வழங்கியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து..! அவருடைய “ஓ செங்காடே சிறு கரடே போய் வரவா…” பாடலிலேயே அவர்களது வாழ்க்கைக் கதையைச் சொல்லிவிட்டார்..! அங்கம்மாள்-அதர்வா மாண்டேஜ் ஷாட்டுகளை வைத்தே காதல் பாடல் காட்சியை எழுதி வாங்கியிருக்கும் பாலா நிச்சயம் ஒரு டெர்ரரிஸ்ட்டுதான்..!

முதல்தரமான இலக்கியவாதிகளின் லிஸ்ட்டில் இருக்கும் நாஞ்சில் நாடனின் வசனம்..! நெல்லை சீமை வசனங்கள் அதிகம் புரியும்படியாகவே இருந்தது..! கங்காணியின் பேச்சை பார்த்து பெண்கள் அதிசயிப்பது..! காசு பணம் வந்தால் பெண்களைகூட சேர்த்துக்குங்க என்ற கங்காணியின் பேச்சு.. “நியாயமாரே..” என்ற அதர்வாவின் கெஞ்சல்..! கச்சம்மாள் பாட்டியின் அத்தனை பேச்சுக்களும் என்று.. அனைத்தும் ரசனையானது..!

செழியனின் ஒளிப்பதிவில் குறையில்லை.. சாலூர் கிராம கெட்டப்பும், தேயிலைத் தோட்ட கெட்டப்பும் ஆக இரண்டுக்கும் வித்தியாசம் தெரியுமளவுக்கு முதல் தர ஒளிப்பதிவை தந்திருக்கிறார் செழியன்..! மக்கள் பாத யாத்திரையாக தேயிலைத் தோட்டம் நோக்கி நடப்பதை அவர் எடுத்துக் காட்டியிருக்கும் விதமே பாவத்தை வரவழைக்கிறது..! கேமிராவும் ஒரு நடிகர் என்பதை இந்தப் படமும் உணர்த்தியிருக்கிறது..!

பாலா படம் என்றாலே சோகத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கும் என்பது நாம் அறிந்ததே..! ஆனால் இதில் அவர் காட்டியிருக்கும் உச்சக்கட்ட சோகம் ஒவ்வொரு சினிமா ரசிகனையும் கண் கலங்க வைத்துவிட்டது.. ‘சேது’, ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ படங்களில் இருந்த அதே சோகத்துடன் கூடுதலாக ஏதோவொரு மன அழுத்தமும் இந்தப் படத்தின் மூலமாக கிடைக்கிறது. இதனாலேயே சொல்கிறேன் இதுவரை வந்த பாலாவின் படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்று..!!!

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வரலாறு இத்தனை கொடூரமாக இருந்தது என்பதை தமிழ்ச் சமூகம் இந்தப் படத்தின் மூலமாகத்தான் அறியும் என்று நினைக்கிறேன். அந்த முன்னோர்களுக்கு எனது நன்றிகள்..! நான் அருந்தும் ஒவ்வொரு துளி தேநீரிலும் எனது முன்னோர்களின் ரத்தமும் கலந்திருக்கிறது என்பதை நான் இந்தப் படத்தின் மூலமாக அறிகிறேன்.. அறிய வைத்த பாலாவுக்கு எனது இதயங்கனிந்த நன்றி..!

தேசிய விருதுக்கான போட்டி இந்த சிருஷ்டியில் தொழில்பட்ட அனைவருக்குள்ளும் வெறியுடன் நடைபெற்றிருக்கிறது. படத்தின் எழுத்தோட்டம் ஓவியங்களின் மேல் போடப்படுகிறது, படம் முடிந்து வந்த பின்பும் காட்சிகள் ஓவியமாக மனதெல்லாம் படர்திருக்கிறது.

எங்கள் மலையக தோட்ட தொழிளார்கள் தங்கள் வியர்வைகளும் இரத்தங்களும் கலந்து இன்று வரை எங்களுக்கு தேனீர் தருவதற்கு கனேடிய தமிழ ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது வர்த்தகர்களோடும் நேயர்களோடும் இணைந்து அந்த தொழிளார்கள் பாதங்கள் தொட்டு வணங்குகிறது.

Shortlink:

Posted by on May 5, 2013. Filed under பொது. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *