ஆரோக்கியமான மிளகாய் நாற்றுகளை வளர்ப்பது எப்படி?

chilli      வீரிய ஒட்டு ரக மிளகாயை பயிரிட்டாலும் ஆரோக்கியமான நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்வதன் மூலமே நல்ல மகசூல் பெற முடியும் எனவும், அதை செயல்படுத்தும் முறை குறித்தும் வேளாண் துறையினர் யோசனை கூறியுள்ளனர்.

மேட்டுப்பாத்தி நாற்றங்கால்:

பாத்திகளை ஓரளவு நிழல்படியும் படியான இடத்தில் 10-15 செ.மீ. உயரத்தில் தயாரிக்க வேண்டும். அதன் அகலம் 1 மீட்டர், நீளம் 3 மீட்டர் வரை அமைக்கலாம். மண் மிருதுவாகவும், ஈரம் காக்கும் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும். இதற்காக மண்ணின் தன்மையைப் பொறுத்து குறுமண், மணல் ஆகியவற்றை கலக்க வேண்டும்.

நன்கு பண்படுத்திய ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 20 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட சேர்க்க வேண்டும். ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு இரண்டு கிலோ டி.ஏ.பி. உரம் இடுவதால் நாற்றுகள் ஊட்டத்துடன் வளர்கின்றன. மேலும் நாற்றுகளை பிடுங்கும் போது வேர் அறுபடாமல் இருக்கும்.

நாற்றங்காலில் நூற்புழு, இளம்பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுபடுத்த ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 250 கிராம் வீதம் பீயுரடான் குருணைகளை இட வேண்டும். அழுகல் நோய் வராமல் தடுக்க ஒரு சதவீதம் வீரியமுள்ள போர்டா கலவையால் மண்ணை நேர்த்தி செய்ய வேண்டும்.

மேட்டுப்பாத்தியின் மேற்பரப்பை மரப்பலகையால் சமப்படுத்த வேண்டும். அதில் 10 செ.மீ. இடைவெளியில் 1.2 செ.மீ. ஆழத்துக்கு கோடுகள் போட்டு, அந்தக் கோடுகளில் விதை நேர்த்தி செய்த விதைகளை, பரவலாக, சீரான இடைவெளியில் விதைக்க வேண்டும். அடர்த்தியாக விதைப்பது அழுகல் நோயை உண்டாக்கும்.  மேலும் நாற்றுகள் மெலிந்து காணப்படும். விதைக்கும் ஆழம் விதைகளின் விட்டத்தை விட 3-4 மடங்கு அதிகம் இருக்க வேண்டும்.

விதைகளை மணல் அல்லது நாற்றங்கால் மண் கொண்டு மூடிவிட்டு பூவாளியால் நீர் பாய்ச்ச வேண்டும். பின் வைக்கோல் அல்லது உலர்ந்த இலைகளை பாத்திகளின் மேல் பரப்ப வேண்டும்.

விதைத்து 10 முதல் 15 நாள்கள் கழித்து பாத்திகளின் மேல் பரப்பிய வைக்கோல் அல்லது இலைகளை அகற்றி விட வேண்டும். தினமும் பூவாளி கொண்டு காலை, மாலை நேரங்களில் நீர் ஊற்றுவது நாற்றுகள் நல்ல வளர்ச்சி அடைவதற்கும், விதைகள் நாற்றங்காலை விட்டு வெளியே வராமல் இருப்பதற்கும் உதவுகிறது.

நாற்றங்காலில் வேர் அழுகல் நோயை கட்டுபடுத்த பதினைந்து நாள்கள் இடைவெளியில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது புளுகாப்பர் 2.5 கிராம் மருந்தை 1 லிட்டர் நீரில் கரைத்து ஊற்ற வேண்டும். நடவுக்காக நாற்று பிடுங்குவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்பே மேட்டுப்பாத்திகள் நன்கு மூழ்கும் அளவுக்கு நீர் பாய்ச்ச வேண்டும்.

குழித்தட்டு நாற்றங்கால்:

நாற்றுகள் நல்ல வாளிப்பாகவும் முழுமையான வேர்களுடனும் கிடைக்க “புரோடிரே’ எனப்படும் குழித்தட்டு நாற்று அட்டைகள் உதவுகின்றன. இம்முறையில் நன்கு மக்கிய தென்னை நார்க்கழிவை வளர் ஊடகமாக பயன்படுத்தி பூச்சிகள் புகாத நிழல் வலைக் கூடாரங்களில் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இம்முறையை பயன்படுத்தி பருவமற்ற காலங்களிலும் நாற்றுகளை உற்பத்தி செய்யமுடியும். குழித்தட்டுகளில் நாற்றுகள் உற்பத்தி செய்யும் போது வழக்கமான முறையை விட விதையளவு 30-40 சதவீதம் குறைவாக தேவைப்படும். பாதுகாப்பான சூழலில் நாற்றுகள் வளர்க்கப்படுவதால் பூச்சி, நோய்களின் தாக்குதல்களை கண்காணிப்பது எளிது.

மேலும் விவரங்களை பெற அவரவர் வட்டாரங்களில் உள்ள தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை அலுவலகத்தை அணுகலாம் என அரக்கோணம் வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை உதவி இயக்குநர் ஜெபக்குமாரிஅனி தெரிவித்துள்ளார்.

தினமணி தகவல் : எஸ்.சபேஷ்

Shortlink:

Posted by on March 8, 2013. Filed under விவசாயம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *