பாவங்கள், கர்மாவில் இருந்து விடுபட மகாவீரர் போதித்த 5 கொள்கைகள்

இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பு வைஷாலி தேசத்தின் (தற்போதைய பீகார்) மன்னராக இருந்தவர் சித்தார்த்தன். அவரது மனைவி த்ரிஷாலா தேவி. திருமணமான சிறிது காலத்தில் ராணி த்ரிஷாலா கர்ப்பமானார். கரு உருவானதில் இருந்தே மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் ராணி. நாடு முழுவதும் பொன்னாலும் பொருளாலும் நிறைவது போலவும் மக்கள் அனைவரும் சுபிட்சம் அடைவது போலவும் அவருக்கு அடிக்கடி கனவு வந்தது. அவரது வயிற்றில் உருவாகும் வருங்கால மன்னன்தான் அத்தனை வளங்களையும் கொண்டு வரப்போகிறான் என்று உணர்ந்தார் த்ரிஷாலா. வருங்கால மன்னனை வரவேற்க நாடே உற்சாகமானது. கி.மு. 599,ம் ஆண்டு சைத்ர மாதம் வளர்பிறை 13,ம் நாளில் அவதரித்தது அந்த குழந்தை. வளம் சேர்ப்பவன் என்ற பொருளில் வர்த்தமானன் என்று பெயரிட்டு வளர்த்தார்கள்.

தந்தை போலவே நாடாளும் மன்னனாக அவன் உருவெடுப்பான் என்று பெற்றோரும் மற்றவர்களும் நம்பியிருக்க.. அவனுக்கோ சிறு வயதில் இருந்தே ஆன்மிகத்தில் நாட்டம். சமண சமய தலைவர்களான தீர்த்தங்கரர்கள் வகுத்து வைத்திருந்த மதக் கொள்கைகளை ஆராய்வான். விவாதிப்பான். நான் யார் என்ற கேள்வி அவனுக்குள் உண்டானது. சோறு, தண்ணீர் மறந்து தியானத்தில் அமர்வான். யசோதை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள். ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. 30,வது வயதில் திடீரென்று துறவறம் போவதாக சொன்னார் வர்த்தமானர். இடைவிடாத தியானம், ஆன்மிக தேடல் என்று 12 ஆண்டுகள் கழித்தார். ரிஜுபாலிகா நதிக்கரையில் தியானம் செய்து ஞானம் அடைந்தார். மனதை அடக்கி எல்லாவற்றையும் வென்றவர் என்று பொருள்படும் வகையில் ஜீனர், மகாவீரர் என்று அழைக்கப்பட்டார். அதன் பின்னர், நாடு முழுக்க சென்று சமண சமய கருத்துகளை மக்களிடம் பரப்பத் தொடங்கினார்.

‘சிறு உயிர்களுக்குக்கூட ஆன்மா உண்டு. மனிதனின் ஆன்மாவும் ஒன்றுதான். சாதாரண எறும்பின் ஆன்மாவும் ஒன்றுதான். அது தனது நல்ல அல்லது கெட்ட செயல்களின் விளைவாகவே கர்மா எனப்படும் வினைப் பயன்களை சேர்த்துக் கொள்கிறது. கர்மாவின் காரணமாகவே சிற்றின்பங்களிலும் தீய வழிகளிலும் நாட்டம் ஏற்படுகிறது. அதன் காரணமாகவே பேராசை, சுயநலமுள்ள வன்முறை எண்ணங்கள், கோபம், வெறுப்பு, பொறாமை போன்ற பாவங்கள் சேர்கின்றன. பேராசையாலும் அளவுக்கு அதிகமாக பொருள் சேர்ப்பதாலும் இதுபோன்ற பாவங்களின் எண்ணிக்கை சேர்ந்துகொண்டே போகிறது. சரியான நம்பிக்கை, சரியான ஞானம், சரியான நடத்தை இருந்தால் மட்டுமே பாவங்களில் இருந்தும் கர்ம சுமையில் இருந்தும் விடுபட முடியும்’ என்பது மகாவீரரின் போதனை. ஆன்மிகத்தின் பார்வையில் ஆண் , பெண் வேறுபாடு கிடையாது. துறவும் எளிமையுமே முக்தி பெறும் வழி என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

‘சிறு உயிர்களுக்கும் தீங்கு தரும் வன்முறையில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன் (அகிம்சை). மற்றவர்களுக்கு சிறிதும் தீங்கு தராத வகையில், உண்மையை மட்டுமே பேசுவேன் (வாய்மை). எனக்கு கொடுக்கப்பட்டது தவிர வேறு எந்த பொருளையும் தொட மாட்டேன் (திருடாமை). பிரம்மச்சரியம் கடைபிடித்து சிற்றின்பத்தில் நாட்டம் செலுத்தாது இருப்பேன். பற்று இல்லாமல் இருப்பேன்’ ஆகிய ஐந்து கொள்கைகளையும் உறுதியுடன் கடைபிடிப்பவனே உண்மையான மனிதன் என்று போதித்தார். சமண சமய கொள்கைளை நாடு முழுவதும் பரப்பிய மகாவீரர், 72,வது வயதில் பாவபுரி என்னுமிடத்தில் தீபாவளி நாளன்று நிர்வாணம் (முக்தி) அடைந்தார். சமண மத தலைவர்களான தீர்த்தங்கரர்கள் வரிசையில் 24,வது மற்றும் கடைசி தீர்த்தங்கரராக மகாவீரர் கருதப்படுகிறார். பற்று இல்லாமல் எளிமையுடன் இருப்பதும் ஞானம் செறிந்து இருப்பதுமே உண்மையான செல்வம் என்று உலகுக்கு போதித்த மகாவீரர் அவதரித்த தினம் இன்று. அவரது போதனைகளை பின்பற்றி நல்வாழ்வு பெறுவோமாக.

Shortlink:

Posted by on September 28, 2012. Filed under கட்டுரை. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *