மண்ணின் மகத்தான ஆற்றல்

மண் என்றால் என்ன என்று உனக்கு தெரியுமா? மண் என்றால் விஞ்ஞானம் ஆயிரம் விளக்கம் கொடுக்கும். உயிராற்றல் அடிப்படையில் மெய்ஞான உணர்வோடு கூறினால் மண் என்பது ஜீவாதாரம், அன்ன ஆதாரம், உயிர் ஆதாரம், இந்த உலகின் மிகப்பெரிய விசய மெய்ஞானமே மண் என்பதில் அடங்கும்.

மண் நீ பூமியில் பிறந்ததிலிருந்து அல்ல, நம் ஆதிவேரையும் அதுவே தாங்கி நம் சரீரம் முதலானவைகளின் பலன்களை இந்த உலக சொந்தபந்தங்கள் உறிஞ்சி உன் சக்கையை வெளியே தூக்கி எறியும்போதும் அந்த மண்ணே நம்மை வாஞ்சையோடு வரவேற்கிறது. மண்ணானது பலவித துர்நாற்ற மாற்றங்களையும் தனக்குள்ளே சகித்து, தன்னுள் விழும் பூச்சிகளையும், தன்னில் உற்பத்தி ஆகும் புழுக்களையும், பற்பல சிதைந்த உடல் வடிவ மாற்றங்களையும், எலும்பு கூடுகளையும் கச்சிதமாக தன் நுண் அணுமாற்றத்திற்கு உட்படுத்தி தன்னிலே கரைத்து முழு அமைதியுடனும், உள்ளே ஆக்ரோஷத்துடனும் உள்ளது.

உலகில் நடமாடும்பொழுது நாம் நல்லது செய்தோமோ அல்லது தீயதை செய்தோமோ, யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி அனைத்தையும் சிதைத்து எந்த பிற தொற்றுநோயும் இன்த மேலான உலகிற்கு ஏற்படாதவாறு இந்த உலகையும், நம்மையும் அற்புதமாக காக்கிறது. அதுமட்டுமல்லாமல் உயிர்கள் வாழும்போது, இந்த மண்ணில் தேவையானதையெல்லாம் தரும் கற்பகத்தரு, காமதேனு இந்த மண் ஆகும்.

குறிப்பிட்ட ஒரு விதையை இந்த உலகில் எந்த இடத்தில் வைத்தாலும் முளைக்க வைக்க முடியுமா? அதிலிருந்து இன்னொரு பரிணாமத்தை உண்டாக்க முடியுமா? மண்ணுக்குள் விதைக்கும் விதை ஒன்றுக்கு நூறாகி நம்மை வளர்க்கிறது.

மண்தான் கல்லாகி, பாறையாகி, தங்கமாகி, பிளாட்டினமாகி, வைரமாகி, செம்பாகி, நிலக்கரியாகி, எல்லாமுமாய் அதுவே ஆகிறது. இயற்கையின் பரிணாமக் கடத்தியாக மண் மகா உயிர் பொருளாகிறது.

இவ்வளவு மகத்துவம் வாய்ந்த மண் கூறை மனிதன் இன்றைக்கு எப்படி பயன்படுத்துகிறான்? நாளுக்கு நாள் இந்த மண்ணின் புனிதத் தன்மையை எப்படி எல்லாம் மாசுப்படுத்துகின்றான். பெரிய பெரிய அடுக்கு மாடிகளையும், உயிர் கொல்லிகலான செல்போன் டவர்களையும் ஈவு இரக்கமின்றி தோண்டி நிற்க வைக்கிறான். ஒன்றுக்கு பத்தாக சம்பாதிக்க இயற்கையின் அரிய வழிகளைஅ நடாமல் செயற்கையின் உயிர்க் கொல்லி உரங்களையும், தொழிற்சாலைகளில் ஈவு இரக்கமின்றி விஷ கழிவுகளையும் மண்ண்இற்குள் செலுத்துகின்றான். இயற்கை நமக்காக பத்திரமாக வைத்திருக்கும் நிலத்தடி குடிநீர்களை எல்லாம் வேண்டிய அளவு கறந்து விட்டான். மேலும் கீழும் சூடாகிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தை இந்த பூமாதேவி நல்லபடியாக அணுகிரகித்து தர வேண்டும் என்பதே பலருடைய வாஞ்சையாகும்., மண்ணை நமது உயிர் மூச்சாக நினைத்து பூமி மனித குலத்தின் வாழ்வுக்கான கோள் என்பதை உணருவோம்.

நாகரிகத்தின் சாயலில் மதிமயங்கி பூமித்தாயின் வயிற்றுக்குள் தினம் அனுப்பும் தொழிற்சாலைக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள், உயிர்க் கொல்லி உரங்களையெல்லாம் எத்தனை நாளைக்குத் தான் தாங்க முடியும். விதையை விதைத்து உண்ணப் போகின்ற மனித குலத்தில் தாயின் பால் முதல் இன்று உணவு வரை எல்லாமே பூச்சிக் கொல்லி மருந்துகளின் ஆளுகையில் தன் கொடூரத்தைக் காட்டிக் கொண்டே உள்ளன.

இந்த மனித குலம் தன் பரிணாம கடத்தியை சர்வகாலமும் கொண்டு செல்லாத தடைத்தன்மையை தானே ஏற்படுத்திக் கொண்டுள்ளது. வலிமையான சந்ததிகளை உருவாக்க எதுவும் முயற்சி செய்யாமல் பலவீனமான சந்ததிகளை பெறவே இங்கு கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறோம். பின்வரும் சந்ததிக்கான பாதுகாப்புத் தேவைகளை உணர்ந்து ஆற்றிய அந்த கால மக்களின் அறிவுக்கும், ஆற்றலுக்கும் முன் இந்த மூளை கெட்ட, மதி மயங்கிய விஞ்ஞானத்தின் சாபத்தால் ஏற்படும் விளைவுகள் என்ன?

உலகெங்கிலும் அறிவு விருத்தி ஆகிவிட்டது உண்மைதான். ஆயுள் பலமும், ஆரோக்கியமும் மட்டுமே இங்கே கேள்விக்குறியாகி விட்டது. சராசரி வாழ்வுநாளை அதிகப்படுத்த இந்த மருத்துவம் போராடிக் கொண்டே பலவீனப்படுகிறது.

ஆரோக்கியம் என்பது இயற்கையின் வழிகளிலே கொட்டிக் கிடக்கிறது. சில மூளை கெட்ட மானுடர்கள் இயற்கை தன்மையையே அழித்து நாகரிகம் வளர்க்கின்றனர். பயிர்களில் பயோ டெக்னாலஜி மூலம் புதிய ஜீன்களை உருவாக்குகிறான்.

நமது உடலில் ஏதாவது பெரிய மாற்றத்தை அளவில், வடிவில் ஏற்படுத்தினால் உடனே கொழுப்பு கட்டி, கேன்சர் என்று கூவுகின்றனர்.
கத்தரிக்காய், அரிசி, வெங்காயத்தின் வடிவத்தையே மாற்றி என்ன செய்ய போகின்றோம்.  ஒட்டு மொத்த உலகமும் கேன்சரை உற்பத்தி செய்ய ஏன் போராட வேண்டும்? ஹிட்லர், முசோலினி பிடிக்காதவர்களையெல்லாம் அறையில் விட்டு குளோரின் வாயுவை திறந்து விட்டனராம். சாவதற்கு கூட ஒரு நூதனவழி, அந்த ஜெர்மானிய அரை கிறுக்கனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? உலகில் உள்ள உயிர்களுக்கு தொல்லை கொடுக்கும் எந்த தேசத்தின் மன்னனுக்கும் என் ஆன்மிக தேசத்தின் மரியாதை இவ்வளவு தான் இருக்கும்.

மனித உயிர்களை பாதுகாக்கும் எந்த தேசத்து வேலைக்காரனையும் கூட இங்கு மண்ணில் வாழவைத்துக் கொண்டாடுவோம். எதிர்ப்புகள் என்பது நாம் விரும்பு போவதல்ல, அதுவாக நம்மிடம் வரும்போது நமது பலத்தை அதன்மீது திணிக்கத்தான் வேண்டும். எதிர்ப்பு ஒடுங்கி போகும்வரை நமது பலம் இறுகத்தான் பிடிக்கும்.

இயற்கையை, அதன் வழிகளில் எதையும் தடைசெய்யக் கூடாது. இயற்கையின் சர்வகட்டுப்பாடும் நமது பாதுகாப்பு கவசமாகும். இயற்கையை உணர்ந்து பணியாற்ற வேண்டும். அதன் அறிவுக்கு நாம் போதிக்க வேண்டியதில்லை. அது ஒரு சர்வகலாசாலை. நாம் இப்பொழுதுதான் அதில் படிக்க விண்ணப்பித்து இருக்கிறோம். விளங்காத ஒன்றை விளங்கி கொள்ள வேண்டுமெனில் வாய்மூடி சொல்வதை மட்டும் கவனமாக கேட்க வேண்டும். நமக்கு எல்லாமும் புரியும். இயற்கை என்பது கற்றலின் இருப்பிடம். இயற்கை என்பது இறைவனின் கருணை.

வெளிநாட்டினர் நம் தாய் மண்ணிற்கு துரோகம் இழைத்தால் அதன் தண்டனையை இந்த ஆன்மிக தேசம் நிச்சயம் நிதானித்து வழங்கும். ஓ! சகோதரர்களே, நம் மண்ணிற்கு தீங்கிழைத்து, மண்ணை கெடுப்பது, மண் வளத்தை கெடுத்து நச்சுத் தன்மை உண்டாக்குவது இவையனைத்தும் இந்த மாபெரும் பிரபஞ்சத்தை அழிக்கக் கூடிய செயல் ஆகும்.
ஒருவன் எல்லைத் தாண்டி, வஞ்சகத்தால் நம் தேசத்திற்கு வந்தால், அவன் சாவான்; இல்லை பிடிபடுவான். இதுதான் இந்திய தீர்ப்பு. பாதுகாப்பு கேட்டு ‘எங்களைக் காப்பாற்று’ என்று வந்தாலும் தின்று கொண்டிருக்கும் நம் பிள்ளைகளின் தட்டைக்கூட பறித்து அவன் வயிற்றை நிரப்புவதே நம் தேசத்து இந்தியனின் உணர்வு.
ஆனால், நம்முடன் இருந்து நம் மண்ணை கெடுக்கும் வரலாற்று பிழைகளை நவீன பூச்சிக் கொல்லி பயன்படுத்தி விவசாயம் என்று செய்வோமானால் அது மனித குலத்தை நாசமாக்கும் செயலே ஆகும்.

தன்னுயிரை கொடுத்து காக்க வேண்டிய மண்ணை மானமுள்ள விவசாயிகளாகிய நாம் என்றும் மறக்க மாட்டோம். மண் வேறு, நாம் வேறல்ல. நாமே மண். மண் என்பதும் நாமே!
இருவேறு பொருளாக வெளித்தெரியும் இருவரும் இயற்கைத் தன்மையிலே அமைதியுடன் வாழ முயற்சிக்க வேண்டும்.
நவீன விஞ்ஞானம் என்பது வாழ்வை வளம் பெறச் செய்வதாகவே இருக்கட்டும். நவீன மெய்ஞானம் என்பது இழந்துபோய் கொண்டிருக்கும் தகுதிகளிலிருந்து நம் மண்ணின் மைந்தர்களையும், உலகத்தையும் மீட்டெடுக்கும் தவமாக இருக்கட்டும்.

பாரதத்தின் ஆன்மிக மண்ணின் ஆதி கருதி என்று கெடாமல், பூமியெங்கிலும் அதன் பொலிவுகளை, அதன் ஆகர்சனத்தை அளித்து நிலப்பரப்புகளை தூய்மையாக வைத்திருப்போம். உலகத்தில் உள்ள அனைத்து நிலப்பரப்புகளும் தூய்மையாவதுபோல மனித மனங்கள் தூய்மை ஆகட்டும்.

மண் எப்பொழுதும் புதுப்பொலிவுடன் நமது ஆகாரத்திற்கான உணவை நமக்கு அளித்து கொண்டே இருக்கட்டும். என்றும் மாறாதா ஆன்மிக தேசத்தோடு நம் மண்ணை அனுதினமும் மண்டியிட்டு தொட்டு மகிழ்வோம். எங்கெல்லாம் வேள்விகள் நடக்கின்றதோ அங்கெல்லாம் பூமித் தாயை, மண்ணை போற்றி வணங்குவோம். பூமாதேவியின் அருளில் எப்பொழுதும் மண் மாசுமருவில்லாமல் அதன் தெளிவுடன் இருக்கட்டும்

Shortlink:

Posted by on May 24, 2012. Filed under விவசாயம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *