முள்ளங்கி.

            முள்ளங்கி.
     தாவரக் குடும்பப் பெயர் -: BRASSICACEAE.
    பயன்தரும் பாகங்கள் -: கிழங்கு, இலை.
    வகைகள் -: வெள்ளை , சிவப்பு முள்ளங்கி
    வளரியல்பு -: முள்ளங்கி சமைத்துண்ணக்கூடிய கிழங்கினம். மணற்பாங்கான இடத்திலும், வளமான மண்ணில் நன்கு வளரும். குளிர் காலத்தில் மலைப்பிரதேசங்களில் அதிக மகசூல் கொடுக்கும். இதன் கிழங்குகள் முட்டை வடிவத்திலும், சிலிண்டர் வடிவத்திலும், உருண்டை வடிவத்திலும் இருக்கும். கிழங்குகள் இழசாக இருக்கும் போதே பிடுங்கி உபயோகிக்க வேண்டும். முற்றினால் வெண்டாகிவிடும் சமையலுக்குப் பயன்படுத்த முடியாது. இழசாக இருக்கும் போது செடியைப் பிடுங்கி கிழங்கைக் கழுவி விட்டுப் பச்சாயாகவே உப்பு காரம் போட்டுச் சாப்பிடுவார்கள், கடித்துத் தின்ன நன்றாக இருக்கும். இங்கு வெள்ளை முள்ளங்கிப் பயன்கள் கூறப்படுகின்றன. இது விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகின்றது. மேட்டுப்பாத்தி அமைத்து மண்ணைப் பக்குவப்படுத்தி விதைகளைத்தூவி பின் 2 அஙுகுல மணல்போட்டு பூவாழியில் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஈரம் அதிகம் காயாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். சில நாட்களில் நாற்றுகள் வளர்ந்த பின் எடுத்துப் பார்களில் நடவேண்டும். அல்லது பார்களின் உச்சியிலும் விதை ஊன்றி முழைக்க வைக்கலாம். சுமார் 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் முள்ளங்கி பிடுங்கும் தருணம் வந்து விடும்.
   மருத்துவப்பயன்கள் -: முள்ளங்கிக் கிழங்கு சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும். இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும், விதை காமம் பெருக்கும்.
சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும்.
முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை கொடுக்கச் சிறுநீரக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும்.
இலைச்சாற்றை 5 மி.லி. ஆக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும்.
‘வாதங்கரப்பான் வயிற்றெரிவு சூலை குடல்
வாதங்காசம் ஐயம் வன்தலைநோய்-மோதுநீர்க்
கோவை பன்னோய் பல் கிரந்தி குன்மம் இரைப்புக்கடுப்பு
சாவும் முள்ளங்கிக் கந்தத்தால்.’
என இதன் மருத்துவ குணத்தைக் கூறுகிறார் கும்பமுனி. இந்த முள்ளங்கியால் வாத நோய், நீர்வடியும் படையான கரப்பான், வயிற்றெரிச்சல், நரம்பு சூலை எனப்படும் உடல் நரம்பு வலி, காசநோய், தலைவலி, மயக்கம், ஆஸ்துமா என்ற இரைப்பு, கடுப்பு என்ற சீதபேதி ஆகியன குணமாகும் என்பது பாடல் கருத்தாகும். சிறுநீரகத்தை நன்கு இயக்கும் குணமுடையது. அதனால் சிறுநீரைப் பெருக்கி நீர்கொர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும். வாரம் இருமுறை இதனை உணவில் செர்க்க வேண்டும். பொரியல், சாம்பார் எதுவும் செய்து சாப்பிடலாம். வெள்ளை முள்ளங்கி மிக்க குணமுடையது.
இதனை இடித்து சாறு பிழிந்து 30-50 மி.லி. அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது சாப்பிடும்போது உணவில் புளி தவிர்க்கவும். மேலே கூறப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். பிற மருந்துகளோடு இது இந்த நோய்களுக்குத் துணை மருந்தாகும்.
கருவுற்ற தாய்மார்கள் இதனை வாரந்தோறும் சாப்பிட்டு வந்தால் பேறு எளிதாகும். சிறுநீர் மிகுதியும் கழியும். கை, கால் வீக்கம் வராது.

Shortlink:

Posted by on March 24, 2012. Filed under விவசாயம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *