பாடசாலைக்கான உதவிகள்

குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலத்திற்குத் தேவையான சமையல் பாத்திரங்களை வாங்குவதற்குரிய ஒரு தொகை நிதியினை தற்போது கனடாவில் வதியும் இளைப்பாறிய ஆசிரியை திருமதி பறுவதம் குமாரசாமி அவர்கள் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடாவின் ஊடாக வழங்கியுள்ளார்.

கடந்த வருடம் கனடாவில் நடைபெற்ற நமது மண்ணின் பொன்விழாக் கொண்டாட்டத்தை இளைப்பாறிய ஆசிரியை திருமதி பறுவதம் குமாரசாமி அவர்கள் கேக் வெட்டி ஆரம்பித்து வைத்திருந்தார். கடந்த மாதம் தமது கணவரின் 30 வது ஆண்டு நினைவை முன்னிட்டு மாணவர்களுக்கு விசேட மதிய உணவினை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது சமையலறைப் பாத்திரங்களின் தேவையை அறிந்து அதற்கான நிதி உதவியைச் செய்யத் தாமாகவே முன்வந்திருப்பது முன்னுதாரணமானது.

IMF_9948

போர் முடிவுக்கு வந்த பின்னர் பாடசாலையை மீளவும் துரித கதியில் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு இவ்வாறான உதவிகள் அவசியம். வெறுமனே அரச உதவிகளை மட்டும் நம்பி இருப்பது என்பது கடல் வற்றி மீன் பிடிக்கக் காத்திருக்கும் கொக்கின் நிலையாகப் போய்விடும். அந்த வகையில் பாடசாலையின் தேவைகளை அதிபரூடாக அறிந்து அதற்கான கொடையாளிகளையும் ஒருங்கிணைத்து குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடாவானது உதவி வருகின்றது. பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்களையும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தற்காலிக ஆசிரியர் உதவு தொகையையும் எமது மன்றம் கனடா வாழ் குப்பிழான் மக்களின் துணையோடு வழங்கி வருகிறது.

கடந்த வருடம் கனடாவில் வதியும் திரு சுதன் அவர்கள் தமது தந்தை அமரர் நாகையா இராசநாயகம் நினைவாக பாடசாலை மாணவர்களுக்குரிய உதவியாக ஒரு தொகைப் பணத்தை வழங்கியிருந்தார். தொடர்ந்து தமது உறவுகளின் நினைவாக அமரர் திரு வல்லிபுரம் குமாரசாமி குடும்பத்தினரும் அமரர் திரு கந்தையா சண்முகம் குடும்பத்தினரும் மாணவர்களுக்கு விசேட மதிய உணவினை வழங்கியிருந்தார்கள்.  சில வருடங்களுக்கு முன் கனடாவிலிருந்து குப்பிழான் சென்ற எமது மன்றத்தின் முன்னாள் தலைவர் திரு கதிரிப்பிள்ளை தங்கவேல் அவர்களும் முன்னாள் ஆசிரியர் திருமதி பூமணி இரத்தினசிங்கம் அவர்களும் அப்போது பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் தேவைப்பட்ட காலணிகளை நேரடியாகப் பாடசாலையில் சென்று வழங்கியிருந்தார்கள். அண்மையில் திரு இராசநாயகம் மதியழகன் பாடசாலைக்கான ஒலிபெருக்கிக் கருவி ஒன்றை வழங்கியிருந்தார். மேலும் பாடசாலை மண்டபத்தின் மேடைக்கான திரைச்சீலையினை குப்பிழான் சென்றிருந்த இளைப்பாறிய ஆசிரியர் திருமதி தங்கமுத்து தம்பித்துரை அவர்களும் திருமதி தனலட்சுமி தங்கவேல் அவர்களும் வழங்கியிருந்தார்கள். இவற்றை குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடாவானது நன்றியுடன் நினைவு கூருகிறது.

இவ்வுதவிகள் வெறுமனே பொருள் உதவி மட்டுமன்று. அதற்கும் மேலாக ஒரு செய்தியையும் சொல்லி நிற்கின்றன. அதாவது  இளைப்பாறிய ஆசிரியர்கள் பழைய மாணவர்கள், பாடசாலை மீது கொண்டுள்ள அக்கறையே  அது.  இது  தற்போது அங்கு சேவை ஆற்றும் ஆசிரியர் சமூகத்துக்கும் அவர்களது தார்மீக கடமைகளை உத்வேகத்துடன் நடத்திச் செல்ல உறுதுணை வகிக்கும் என்பதில் ஐயமில்லை.

தேவையுணர்ந்து உதவி நல்கும் திருமதி பறுவதம் குமாரசாமி அவர்களுக்கும் ஏனைய கொடையாளிகளுக்கும் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடாவானது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றது.

Shortlink:

Posted by on May 1, 2015. Filed under செய்திகள், மண்ணிலிருந்து. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *