தமிழ்மக்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் பண்பாட்டுப் பாரம்பரியங்களை நழுவ விடாது பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு வழங்க வேண்டும்: புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் (Video)

sivamahalingam1     உலகமெல்லாம் பரந்து வாழுகின்ற தமிழ்மக்களனைவரும் எந்த நாட்டில் வாழ்ந்தாலும்,எந்தச் சூழ் நிலையில் வாழ்ந்தாலும் எங்களுடைய பண்பாட்டுப் பாரம்பரியங்களை நழுவ விடாது பாதுகாத்து எங்களுடைய அடுத்த சந்ததிக்கும் வழங்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தரின் ஓய்வு நிலை விரிவுரையாளரும், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் ஓய்வு பெற்ற விரிவுரையாளருமான சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம்.

மன்மத சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அவர் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள். சைவத் தமிழர்களாலும் சிங்கள பௌத்தர்களாலும் கொண்டாடப்படுகின்ற சித்திரைப் புத்தாண்டு முக்கியமான தினமாக நம்மவர்கள் வாழுமிடமெல்லாம் போற்றி வணங்கி கொண்டாடி மகிழ்கிறார்கள்.

மேடராசியிலே சூரியன் பிரவேசிக்கின்ற இந்தப் புண்ணிய தினமாகிய சித்திரைப் புதுவருட தினத்தன்று நம்மவர்களால் மகிழ்ச்சியாக உற்ற சுற்றம் சூழத் தத்தமது வீடுகளில் இந்தப் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

புதுவருடம் பிறந்ததும் தங்களுடைய குல தெய்வ ஆலயங்களுக்குச் சென்று வணங்கும் மரபைப் பேணி வருகிறார்கள்.

அது மாத்திரமல்லாமல் எங்களுடைய இந்துப் பண்பாட்டுப் பாரம்பரியத்திலே இந்துக்களின் ஞானக் களஞ்சியமாகவிருக்கின்ற உபநிஷதங்களிலே தைத்திரிய உபநிஷதத்திலே வருகின்ற மாதா, பிதா, குரு தெய்வமென்ற வாக்குக்கமைய மாதா,பிதா,குரு ஆகியோர்களிடம் தங்களுக்குப் பிறந்திருக்கின்ற புதுவருடம் சிறப்பாக அமைய வேண்டுமெனச் சென்று ஆசிர்வாதம் பெற்றுக் கொள்கின்றனர்.

சுற்றம் தழுவி வாழுகின்ற நிலை தமிழர்களுடைய பண்பாடு. ஆகவே, தங்களுடைய உறவுகள் அனைவருடனும் இணைந்து இந்தப் புத்தாண்டு நிகழ்வை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது மரபாகும்.

இந்தப் புத்தாண்டு தினத்திலே நம்மவர்களுடைய வாழ்விலே ஒளி வீச வேண்டும். நம்மவர்களுடைய பண்பாட்டுப் பாரம்பரியம் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும். எந்த நாட்டிலே, எந்தவிடத்திலே வாழ்ந்தாலும் எங்களுடைய விழுமியங்களைத் தவற விடக் கூடாது என்ற நோக்குடன் நம்மவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். எங்களிடமிருந்தவொரு இறுக்கமான பண்பாட்டுப்

பாரம்பரியங்களெல்லாம் காலவோட்டத்திலே சிதைவுகள் ஏற்படுவதைக் கண்டு நாங்கள் மனம் வருந்துகிறோம்.

எங்களுடைய இளைஞர்கள் தான் இந்த நாட்டின் உண்மையான முதுகெலும்புகள். அவர்கள் சரியான முறையில் இயங்குவதற்கு வீட்டுச் சூழல், பாடசாலைச் சூழல், கிராமியச் சூழல், எங்களுடைய பொது நிறுவனங்களின் ஆதரவு எல்லாம் சிறப்பாக விளங்க வேண்டும்.

அவர்கள் இந்த உலகியல் வாழ்வியலிலே எல்லா வகையான செல்வங்களையும் பெற்று மனநிறைவோடு வாழ வேண்டும். சகல செல்வ யோகம் மிக்க பெரு வாழ்வு என அருணகிரி நாதர் கூறுவாரே… பதினாறு செல்வங்களும் முறையாகப் பெற்று வாழ்வதற்கு ஒரு அத்திவாரமாக, அடிநாதமாக இந்தப் புத்தாண்டு தினத்திலே இறைவனைப் பிரார்த்தித்து தங்களுடைய வாழ்விலே ஒளியேற்ற எண்ணுகின்றனர்.

ஆகவே எங்கள் மக்களுக்குத் தேவையான சகல செல்வங்களும் கிடைக்க வேண்டும்.

இந்த வருடத்தை ஆரம்பிக்கின்ற போது நல்ல சிந்தனையோடும் நல்ல உறுதிப்பாட்டோடும் ஆரம்பிக்கின்ற நன்னாளாக நம்மவர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆகவே, உலகமெல்லாம் பரந்து வாழுகின்ற தமிழ் மக்களனைவரும் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்தச் சூழ் நிலையில் வாழ்ந்தாலும் எங்களுடைய பண்பாட்டுப் பாhரம்பரியங்களை நழுவ விடாது பாதுகாத்து எங்களுடைய அடுத்த சந்ததிக்கும் வழங்க வேண்டும் அல்லது வழி காட்டிச் செல்ல வேண்டும். தமிழர்களுடைய வாழ்வியல் தெய்வீகத்தோடும், பண்டிகைகளோடும் இணைந்த வாழ்வியல்.

ஆகவே பண்டிகைகளிலே சிறப்பிடம் பெறுகின்ற இந்தப் புத்தாண்டுப் பண்டிகையிலே எங்களின் உணர்வுகள் அனைத்தும் தூய்மை பெற வேண்டும். எண்ணங்கள் தான் வாழ்வு.அந்த வகையிலே ஆரோக்கியமான மனநிலையும், உறுதியான உடல்நிலையும் பெற்று நம்மவர்கள் அனைவரும் சிறப்பாக வாழ பார்வதி சமேத பரமேஸ்வரப் பெருமானின் திருவருள் உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் கிடைக்க இந்தப் புத்தாண்டு தினத்திலே இனிமையான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன் என்றார்.

செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்: செ.ரவிசாந்-

Shortlink:

Posted by on April 15, 2015. Filed under இந்துசமயம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *